Sunday, May 5, 2013

உங்களுக்கு இதோ சில டிப்ஸ


நவீன யுக மனைவி'யின் அன்பைப் பெற வேண்டுமா? 
உங்களுக்கு இதோ சில டிப்ஸ்...

* வீட்டு வேலையைத் தவிர, தங்களால் நிறைய விஷயங்கள் சாதிக்க முடியும் என, பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே, மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குவியுங்கள்.

* இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு என்று ஓர் லட்சியம், கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

* மனைவியை சமாதானப்படுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதி ஆகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்கு திடீர் ஆச்சரியம் கொடுக்கும் வழக்கத்தை கைவிடாதீர்கள்.

* "ஆண்கள் அழ மாட்டார்கள்' என்பது சரி தான். உணர்வுகளை வெளிப்படுத்தும், உணர்வுப்பூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகின்றனர் என்பதே உண்மை. அதற்காக, எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை, பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

* நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது, உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், தொழிலைப் பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்பு கொடுங்கள்.

* நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை, மனைவிக்கு பிடிக்கும். அப்படிப்பட்ட கணவர் தான் அவர்களை பொறுத்த வரை, "முழுமையானவர்'.

* பேசுவது பெண்களுக்குப் பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களைப் பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றைப் பற்றியுமே பகிர்ந்து கொள்ளுங்கள்.

பக்தி செய்வது மிகவும் சுலபம்


கடவுள் மிகவும் எளிமையானவர். பக்தியாலேயே அவனை அடைய முடியும். பக்தியே முக்திக்கு வழி. பக்தி செய்வது மிகவும் சுலபம். தவம், தியானம், பூஜை போன்றவைகளை விட, மனதால் பகவானை துதி செய்வது சுலபம். மனதுக்குள்ளேயே பகவானை வழிபடுவது இன்னும் விசேஷமானது. எளிமையாக இருந்தே, எளியவனான கடவுளிடம் பக்தி வைக்கலாம்.

நம்முடைய பூஜை, பக்தி இவைகளை கண்டு, மற்றவர்கள் பாராட்ட வேண்டுமென் பதில்லை; பகவான் பாராட்டினால் போதும்.
ஒரு கூடை பூவைப் போட்டு, ஆயிரம் நாமாவால் பூஜை செய்ய வேண்டுமென்பதில்லை; ஒரே ஒரு புஷ்பம் போட்டு, ஒரே நாமாவைச் சொன்னாலும் அவன் ஏற்றுக் கொள்வான். பூஜை செய்வதற்கான பொருட்களை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை; மானச பூஜையே போதும்.

வள்ளலார் கூட எளிமையாக வாழ்ந்தவர். எளிய முறையிலேயே ஆண்டவனை பூஜித்தவர். அகல் ஜோதியையே கடவுளாக வழிபட்டார். தெய்வங்கள் ஜோதி வடிவமாகத் தான் சொல் லப்பட்டுள்ளது. "ஜோதி ஸ்வரூபன்' என்பர். ஜோதி தான் அவனது வடிவம். கடவுள் மன்னிக்கும் குணம் உடையவர். தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால், உடனே மன்னித்து விடுவான்.

கடவுள், என்றாலே, ஒரே பரம் பொருள் தான். பல உருவங்களில் வழிபடுகின்றனர். இந்த உணர்வு வேண்டும். தினமும் கோவிலுக்குப் போய்த் தான் தெய்வ வழிபாடு செய்ய வேண்டுமா அல்லது வீட்டில் இருந்து கொண்டே பக்தி செய்ய முடியாதா என்று யோசிக்கலாம். கோவிலுக்கு போனாலும் சரி, வீட்டில் இருந்தாலும் சரி, மனம் மட்டும் தெய்வத்திடம் இருக்க வேண்டும். கோவிலுக்குப் போனால், பலவித ஆரவாரங்களுக்கு இடையில், மனதை பகவானிடம் வைக்க முடியுமா என்பதும் கேள்விக் குறிதான்.

அங்கே தான் பல உறவினர், நண்பர்களை சந்திக்க நேரிடும். அவர்களை பார்த்த பின் சும்மா இருக்க முடியுமா? குசலம் விசாரிக்க வேண்டியிருக்கும்... "பெண் கல்யாணம் என்ன ஆயிற்று? பிள்ளை படிப்பு என்ன ஆயிற்று? துபாயில் இருக்கும் பெரிய பையன் பணம் அனுப்புகிறானா?' இப்படி, பலவித குடும்ப விஷயங்கள் கேள்வி - பதிலாக ஆகிவிடுகிறது. அப்புறம் மனதை பகவானிடமே வைப்பது என்பது, எப்படி சாத்தியம். 

சரி, வீட்டிலேயே இருந்து, மனதை, பகவான் பக்கம் திருப்பலாமே என்றால், இது கூட சிலருக்கு சாத்தியமாவதில்லை.
அப்போதும் கூட குடும்ப விவகாரம்... "சின்ன பையன் ஸ்கூல் போனானா, பெரிய பெண் டியூஷனுக்கு போனாளா, இந்த வாரம் ரேஷன் வாங்கியாச்சா? ஸ்டோர்ல பாமாயில் வந்திருக்கா...' என்று எத்தனையோ கேள்வி - பதில்கள். தெய்வ வழிபாடு, பக்தி என்பது ஒரு பகுதி; குடும்பம், குடும்ப விவகாரம் என்பது இன்னொரு பகுதி. இரண்டையும் கலந்தால், பக்திக்கு பங்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

குக்கிராமத்தில், ஓட்டு வீட்டில் வள்ளலார் தவம் செய்து முக்தி பெற்றார்.
 
63 நாயன்மார்களில் ஒருவரான சண்டிகேஸ்வரர், திருவப்பாடி கிராமத்தில் பசுக்களை மேய்த்து, வெட்ட வெளியில் மண்ணால் லிங்கம் செய்து அதன் மீது, பால் கறக்கவிட்டு வணங்கி முக்தி பெற்றார். 

பூசலார் நாயனார் மனதினாலேயே கோவிலை நிர்ணயம் செய்து, சிவபெருமானை வழிபட்டு சிவ தரிசனம் பெற்றார். இப்படி பல சரித்திரங்கள் உள்ளன.

ஆக, மனிதனுக்கு தெய்வ பக்தி அவசியம் இருக்க வேண்டும். இப்படி பக்தி செய்து நற்கதி அடையும் பாக்கியம் மனிதனுக்கு மட்டுமே உள்ளது. மற்ற ஜீவன்களுக்கு பக்தி, பூஜை, வழிபாடு என்பதெல்லாம் தெரியாது; அதனால், அவை இதில் ஈடுபடுவதில்லை. 

மனிதன், சுலபமான முறையில், தியானத்தின் மூலமே பக்தி செய்து பகவானை அடைய முடியும். இதற்குத் தான் முயற்சி செய்ய வேண்டும்.